ஆஷஸ் தொடர்: 2வது டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை அறிவித்தது இங்கிலாந்து
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் விலகியதை அடுத்து, வில் ஜேக்ஸ் மாற்று வீரராக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 4 ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிப் பெற்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ள இருப்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதில் வில் ஜேக்ஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை.
அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோயப் பஷீருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர, ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோருடன் ஜாக் கிரௌலியும் பிளேயிங் லெவனில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா காயம் காரணமாக இரண்டவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்டோர் காயம் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டிருக்கும் நிலையில், தற்சமயம் உஸ்மான் கவாஜாவும் இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் போட்டியிலிருந்து விலகிய உஸ்மான் கவாஜாவிற்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் அல்லது ஜோஷ் இங்கிலிஸ் ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஆஸ்திரேலிய அணி (இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு): ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.