WPL 2025: ஹர்லீன் தியோல் அதிரடி அரை சதம்; முதல் வெற்றியை பதிவு செய்தது யுபி வாரியர்ஸ்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீராங்கனை அமஞ்சோத் கவுர் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான கமலினியும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 16 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட்-நிக்கோலா கேரி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் கடந்தார். பின்னர் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 65 ரன்களை சேர்த்திருந்த நாட் ஸ்கைவரும் தனதூ விக்கெட்டை இழந்தார்.
அதே சமயம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலா கேரி 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது. யுபி வாரியர்ஸ் தரப்பில் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன் பின் இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க வீராங்கனைகள் கிரண் நவ்கிரே 10 ரன்களிலும், கேப்டன் மெக் லெனிங் 25 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்டும் 25 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் - சோலே ட்ரையான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இன்றைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்லீன் தியோல் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இந்த போட்டியில் ஹர்லீன் தியோல் 64 ரன்களையும், சோலே ட்ரையான் 27 ரன்களையும் சேர்க்க, யுபி வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹர்லீன் தியோல் ஆட்ட நாயகி விருதை வென்றார்.