பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

 பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

இதனையடுத்து அனைத்து அணிகளும் தொடருக்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அணியானது டி20 தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சியாக இந்த தொடர் இருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. குறிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ள பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சீன் அபோட், மஹ்லி பியர்ட்மேன், பென் ட்வார்ஷுயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப் மற்றும் மாட் ரென்ஷா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். மேற்கொண்டு டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் இங்கிலிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், கூப்பர் கானோலி, பென் துவார்ஷூயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குன்னெமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா