சச்சின், சேவாக், பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ளது. இதில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன் மூலம் 37 ஆண்டுகளில் முதல் முறையாக நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டேரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ் ஆகியோரது சதத்தின் மூலமாக 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி சதமடித்த நிலையிலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 46 ஓவர்களில் 296 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சச்சின் சாதனை முறியடிப்பு
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், சதமடித்து அசத்திய விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக 42 போட்டிகளில் விளையாடி 26 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் தற்சமயம் விராட் கோலி 36 போட்டிகளில் விளையாடி 28 சிக்ஸர்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
சேவாக், பாண்டிங்கை முந்திய கோலி
இது தவிர இப்போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கு பாண்டிங் மற்றும் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோரது சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
முன்னதாக ரிக்கி பாண்டிங் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 6 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் தற்சமயம் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 7ஆவது சதத்தைப் பதிவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
உலக சாதனை
இது தவிர, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அவர் இதுவரை 247 இன்னிங்ஸ்களில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி 12,676 ரன்களை எடுத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
அவர் 335 இன்னிங்ஸ்களில் 29 சதங்கள் மற்றும் 74 அரைசதங்கள் என 12,662 ரன்களைக் குவித்திருந்தார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3ஆம் இடத்தில் பேட்டிங் செய்து 10,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்த வீரர்களாகவும் விராட் கோலி மற்றும் ரிக்கி பாண்டிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.