இந்தியா ஓபன் 2026: சாதனை படைத்த ஆன் சே-யங்; ஆடவர் பிரிவில் லின் சுன் யி சாம்பியன்
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தைவானை சேர்ந்த லின் சுன் யி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு வளாகத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடரானது, ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் இத்தொடரின் இறுதிப் போட்டியானது இன்றைய தினம் நடைபெற்றது.
சாம்பியன் பட்டம் வென்ற லின் சுன் யி
அந்தவகையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தைவானைச் சேர்ந்த லின் சுன் யி-யை எதிர்த்து, இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே அதிக்கத்தை செலுத்திய லின் சுன் முதல் செட்டை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் ஜோனதன் கம்பேக் கொடுக்க முயற்சித்தார்.
இதில் இறுதிவரை போராடிய ஜோனதனால் செட்டை கைப்பற்ற முடியாமல் 18-21 என்ற கணக்கில் இழந்தார். இதன் மூலம் தைவானின் லின் சுன் யி 21-10, 21-18 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி, இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் இத்தொடரில் அவர் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.
தென் கொரிய வீராங்கனை சாதனை
அதேபோல் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜியி-யை எதிர்த்து தென் கொரிய வீராங்கனை ஆன் சே-யங் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட ஆன் சே-யங் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் ஆன் சே ஆதிக்கத்தை தொடர, வாங் ஜியால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் இரண்டாவது செட்டையும் ஆன் சே-யங் 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அன் சே-யங் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வாங் ஜியி-யை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் ஆன் சே-யங் மூன்றாவது முறையாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதற்கு முன் அவர் 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.