‘‘மதுரை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்’’ - மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதி
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மதுரை விமான நிலையம் மிகவும் முக்கியமான இடம் என்பதால், அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொள்ளும் என்று அத்துறையின் அமைச்சர் கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரை விமான நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அவர் தனது உரையில், ‘‘மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கான விமான சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை - சென்னை, மதுரை - பெங்களூரு இடையேயான விமான சேவையை அதிகரிப்பது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அவையில் உறுதி அளிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு, ‘‘தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை. எனவே, இதை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தின் மேம்பாட்டுக்காக அரசு குறிப்பாக விமானப் போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்கள் மட்டுமல்ல, சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் மீது நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிர பரிசீலனையில் உள்ளது.
மதுரை - சென்னை மற்றும் மதுரை - பெங்களூரு விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நிச்சயம் பேசப்படும். அந்த நிறுவனங்களின் திறனுக்கு உட்பட்டு நிச்சயம் அது அமல்படுத்தப்படும்.
எங்களைப் பொறுத்தவரை மதுரை விமான நிலையம் உள்ளாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இடம். எனவே, அதை மேம்படுத்தும் நோக்கில் நாங்கள் எங்கள் பணிகளை மேற்கொள்வோம்’’ என தெரிவித்தார்.