ஆசிய கோப்பை சர்வதேச தடகள சைக்கிள் போட்டி - சென்னையில் தொடங்கியது
சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான சர்வதேச தடகள சைக்கிள் போட்டியின் துவக்க விழா, ஓ.எம்.ஆர் சாலையில் தனியார் விடுதியில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இந்த சர்வதேச தடகள சைக்கிள் போட்டியில் 11 நாடுகளை சேர்ந்த 135 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தடகள சைக்கிள் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று (ஜன.29) முதல் 3 நாட்கள் சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் சர்வதேச தடகள சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, நேபாளம், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் உள்ள தனியார் விடுதியில் இன்று கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது” என்றார்.
இவ்விழாவில் இந்திய சைக்கிள் ஓட்டுநர் கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீ ஓம்கார் சிங், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு சர்வதேச வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிக்கான இலட்சினையை வெளியிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேகநாத ரெட்டி, “சர்வதேச அளவில் புகழ்பெற்ற தடகள சைக்கிள் போட்டி தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறுகிறது. டிராக் ஆசிய கோப்பை-2026 க்கான இந்தப் போட்டியில் 11 நாடுகளை சேர்ந்த 135 பேர் பங்கேற்கின்றனர். நம் நாட்டின் சார்பாக 60 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வீரர்கள் உள்ளனர். டெல்லியை தவிர்த்து முதன்முறையாக சென்னையில் இந்த சர்வதேச போட்டி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு அமைந்த டிராக் சைக்கிள் போட்டி தளம் தான் காரணம், இதில் ஏற்கனவே தேசிய அளவினான போட்டிகள் நடந்துள்ளது” என்றார்.
இதேபோல் முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச 5150 அயர்ன்மேன் ட்ரையத்லான் போட்டி சென்னையில் ஜனவரி மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.