முத்தரப்பு டி20 தொடர்: இலங்கையை பந்தாடி ஜிம்பாப்வே அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுபக்கம் விளையாடிய மருமணி 10 ரன்னிலும், அடுத்து வந்த பிராண்டன் டெய்லர் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் பென்னட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா ரன்கள் ஏதுமின்றியும், குசால் மெண்டி 6 ரன்னிலும், குசால் பெரேரா 4 ரன்னிலும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்க்ஷாவும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் இலங்கை அணி 25 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா ஒருபக்கம் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவான்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் சிக்கந்தர் ரஸா ஆட்டநாயகன் விருதை வென்றார்.