‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா; மலேசியாவுக்கு பறந்த நடிகர் விஜய்

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா; மலேசியாவுக்கு பறந்த நடிகர் விஜய்

 ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மலேசியாவுக்கு புறப்பட்டார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நாளை (டிச.27) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் இன்று சென்னை விமான நிலையம் வருகை புரிந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்றார்.

அவரைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் அனிருத், "மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். அந்த நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதுதான் விஜயின் கடைசி திரைப்படம். எங்கள் இருவர் கூட்டணியில் வந்துள்ள அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்" என்றார்.

    நடிகர் விஜய் கடந்த 2024, பிப்ரவரி 2 ஆம் தேதி ’தமிழக வெற்றிக் கழகம்’ எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய நாளன்று, 'ஜனநாயகன்' தனது கடைசி படம் என்றும் இதன் பிறகு திரைத்துறையில் நடிக்காமல் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார்.

    ஜனநாயகன் விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படுவதால், இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜனநாயகன் படத்திலிருந்து ’தளபதி கச்சேரி’, ’ஒரு பேரே வரலாறு’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.