தமிழகத்தில் திடீர் மழை ஏன்? இன்று வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அலர்ட்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் திடீர் மழை ஏன்? இன்று வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அலர்ட்!
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை (Easterly waves) நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை, நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் இன்றும் நாளையும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.