விஜய் ஹசாரே கோப்பை 2025-26: விஸ்வராஜ் ஜடேஜா அதிரடியில் பஞ்சாப்பை பந்தாடியது சௌராஷ்டிரா

விஜய் ஹசாரே கோப்பை 2025-26: விஸ்வராஜ் ஜடேஜா அதிரடியில் பஞ்சாப்பை பந்தாடியது சௌராஷ்டிரா

பஞ்சாப் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் பிரப்ஷிம்ரன் சிங் - ஹர்னூர் சிங் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் ஹர்னூர் சிங் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது.

இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரப்ஷிம்ரன் சிங் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நமன் திர், நெஹால் வெதேரா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த அன்மோல்ப்ரீத் சிங் சதமடித்த அசத்திய கையோடு, 100 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரமந்தீப் சிங் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற பேட்டர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதன் காரணமாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணி தரப்பில் சேத்தன் சக்காரியா 4 விக்கெட்டுகளையும், அன்குர் பன்வார், சிராக் ஜானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சௌராஷ்டிரா அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஹர்விக் தேசாய் மற்றும் விஸ்வராஜ் ஜடேஜா இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், முதல் விக்கெட்டிற்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

இதில் ஹர்விக் தேசய் 63 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த விஸ்வராஜ் சதம் விளாசி அசத்தினார். அவருடன் இணைந்த பிரெராக் மான்கட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, சௌராஷ்டிரா அணியும் எளிதான வெற்றியை நோக்கி சென்றது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஸ்வராஜ் ஜடேஜா 18 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 165 ரன்களையும், பிரெராக் மான்கட் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் சௌராஷ்டிரா அணி 39.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.