சென்னையில் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் மீண்டும் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் கலந்து கொள்கிறார்கள். ் வெற்றி பெறுபவர்கள் போட்டியை வென்றதற்காக வழங்கப்படும் 250 தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவார்கள். ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகையாக ரூ.2.40 கோடி வழங்கப்படவுள்ளது. கடந்த சீசனின் வெற்றியாளரான செக் குடியரசின் 20 வயதான லிண்டா ஃப்ருஷ்விர்டோவா'வுக்கு போட்டித் தர வரிசையில் முதலிடத்திலும், இரண்டு குழந்தைகளின் தாயான ஜெர்மனியின் தாட்ஜானா மரியா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் போட்டி நடைபெறும் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளிக்கும் வகையில் புதிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்காட்சி, உணவு கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வடகிழக்கு பருவமழை காரணமாக போட்டி நடைபெறும் நாட்களில் மழை பொய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் மழை நின்ற ஒரு மணி நேரத்திற்குள் போட்டிகளை தொடங்கும் வகையில் மைதானங்களை அதற்கேற்றார் போல தயார்படுத்தி உள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போட்டித் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.
இதில், முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், விளையாட்டுத்துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விளையாட்டுத்துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ''அனைத்து விளையாட்டுகளிலும் சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அந்த வகையில் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தும் வகையில் மைதானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.