நியூசிலாந்து டி20 தொடர்: இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் சேர்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது எதிர்வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இரு அணியையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கெனவே அரிவித்துள்ள நிலையில், வீரர்களும் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இவ்விரு அணிகளும் மோதும் கடைசி டி20 தொடர் என்பதால், இத்தொடரின் மீது ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக நட்சத்திர வீரர்கள் திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயமடைந்ததுடன், நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
சமீபத்திய விஜய் ஹசாரே கோப்பை தொடரின் போது திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் காயத்தை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இருந்து திலக் வர்மாவும், வாஷிங்டன் சுந்தர் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக அவர் 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் விளையாடி இருந்தார். அதேசமயம், ரவி பிஷ்னோய் ஓராண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர், 8 அரைசதங்களுடன் 30.7 என்ற சராசரியில் 1,104 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் ரவி பிஷ்னோய் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான நிலையில் 42 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், டி20 பவுலர்கள் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர்*, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய்*.