ஷுப்மன் கில்லின் சாதனையை முறியடிப்பாரா ஸ்மிருதி மந்தனா?

ஷுப்மன் கில்லின் சாதனையை முறியடிப்பாரா ஸ்மிருதி மந்தனா?

இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 2025ஆம் ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த கிரிக்கெட் வீரர் என்ற ஷுப்மன் கில்லின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதல் நான்கு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும். அதேசமயம் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பெற முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 62 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், 2025ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற ஷுப்மன் கில்லின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

முன்னதாக ஷுப்மன் கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் சேர்ந்து மொத்தமாக 35 போட்டிகளில் விளையாடி 49 என்ற சராசரியில் 1,764 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 7 சதங்கள், 3 அரைசதங்களும் அடங்கும். அதேசமயம் ஸ்மிருதி மந்தனா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 1,703 ரன்களைச் சேர்த்துள்ளார்.

இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள மந்தனா, 5 சதங்கள், 5 அரைசதங்களுடன் 1,362 ரன்களை குவித்துள்ளார். அதேசமயம் டி20 கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் விளையாடிய மந்தனா ஒரு சதம், 3 அரைசதங்களுடன் சேர்த்து மொத்தமாக 341 ரன்களைச் சேர்த்துள்ளார். இந்நிலையில் அவர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஷுப்மன் கில்லின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நான்காவது டி20 போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா, அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 10 ஆயிரம் ரன்களையும் பூர்த்தி செய்திருந்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10ஆயிரம் சர்வதேச ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை மற்றும் உலகளவில் நான்காவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.