ஜஸ்டின் கிரேவ்ஸின் ஆல் டைம் கிரேட் இரட்டைச் சதம்: வரலாறு படைத்த மே.இ.தீவுகளின் மாரத்தான் டிரா
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்றைய தினம் கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய தினமாக அமைந்தது. 531 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 4-வது இன்னிங்சில் மே.இ.தீவுகள் 457 ரன்களைக் குவித்து வரலாற்று உலக சாதனை நிகழ்த்தியதோடு மாரத்தான் விரட்டலில் போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் டிரா செய்தது. மே.இ.தீவுகளின் ஜஸ்டின் கிரேவ்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த 4வது இன்னிங்சை ஆடி 202 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
முன்னதாக ஷேய் ஹோப் அதியற்புதமாக ஆடி 140 ரன்களை எடுத்ததும் பெரிய பங்களிப்பாக அமைந்தது. 72/4 என்ற நிலையிலிருந்து ஷேய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் சேர்ந்து 196 ரன்களைச் சேர்த்ததும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆக அமைந்தது.
இருவரும் சேர்ந்து சுமார் 409 பந்துகளைச் சந்தித்து 180 ரன்களை முறியடிக்க முடியாமல் 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக உலக சாதனை கூட்டணி அமைத்து டெஸ்ட்டை வெற்றிகரமாக டிரா செய்தனர். இது டிரா ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது ஒரு தார்மிக வெற்றியே.
நியூஸிலாந்து அணி தரப்பில் நேதன் ஸ்மித், மேட் ஹென்றி காயம் காரணமாக பவுலிங் செய்ய முடியாமல் போனது ஒரு பெரும் பின்னடைவு, அதே வேளையில் நடுவர் தீர்ப்புகள் ஒன்றிரண்டு மே.இ.தீவுகளுக்குச் சாதகமாக அமைந்தது.
ஜஸ்டின் கிரேவ்ஸ் 4வது இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்த 4வது மே.இ.தீவுகள் வீரராகத் திகழ்ந்தார். மொத்தத்தில் 4வது இன்னிங்ஸ் இரட்டைச் சதம் அடித்த 7வது வீரர். ஹெட்லி, கைல் மேயர்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், இப்போது ஜஸ்டின் கிரேவ்ஸ். உலக அளவில் கவாஸ்கர், எட்ரிச், நேதன் ஆஸ்ட்ல் ஆகியோர் 4வது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் எடுத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் மொத்தம் 163.3 ஓவர்களை ஆடியுள்ளது, அதாவது 694 நிமிடங்கள் ஆடி டிரா செய்துள்ளது. ஆட்ட நாயகனாக ஜஸ்டின் கிரேவ்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிமார் ரோச் இந்தப் போட்டியில் 2வது இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகளுடன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு தொடர்ச்சியாக 50-க்கும் கூடுதலான டாட்பால்களுடன் 4வது இன்னிங்சில் 53 ரன்களை எடுத்து உறுதுணையாக நின்று வரலாற்று டிரா செய்ய உதவினார்.