உதயமும் வரும்.. உதயநிதியும் வருவார்! இனி அவர் தான் எதிர்காலம்! அழுத்தமாகச் சொன்ன அறிவாலயம்!

உதயமும் வரும்.. உதயநிதியும் வருவார்! இனி அவர் தான் எதிர்காலம்! அழுத்தமாகச் சொன்ன அறிவாலயம்!

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்பது ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இல்லாது, திமுக தலைமையின் எதிர்காலத்திற்கு கொடுத்த மிகத் தெளிவான சைகை என்றே சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கட்சிக்குள் உள்ளவர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும், "திமுக-வின் அடுத்த தலைமை உதயநிதிதான்" என்ற செய்தியை ஸ்டாலின் இந்த ஆண்டு மிகத் துல்லியமாகப் பதித்துவிட்டார் என்கின்றனர் திமுக சீனியர்கள்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த ஆண்டில் உதயநிதி பிறந்த நாளுக்காக பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் குவிந்த வாழ்த்து விளம்பரங்கள் சாதாரண அரசியல் விளம்பரங்களல்ல. அவற்றில் பெரும்பாலானவை "திமுகவின் எதிர்காலம்", "அடுத்த தலைமுறை தலைவர்", "முதல்வர் வேட்பாளர் உதயநிதி" என்ற வாசகங்களைக் கொண்டிருந்தன. இதனால், வாழ்த்து என்ற பெயரில் புதிய அரசியல் சிக்னலை திமுகத் தலைமை திறம்பட வெளிப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

திமுக அடுத்த தலைமுறை

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தலைமை, உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவதில் கவனமாகவும், கட்சிக்குள் யாருக்கும் பிணக்கு ஏற்படாத வகையிலும் நடந்து கொண்டது. விளையாட்டு உதயநிதி. கட்சியின் மாவட்ட ஆய்வுக்கூட்டங்களை நடத்த அதிகாரம் கொடுக்கப்பட்டதும், துணை அமைப்புகளில் விசுவாசிகளுக்கான இடங்கள் அதிகரித்ததும் இதற்குச் சான்று.

அடுத்த தலைவர்

2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி இன்னுமே சில நடவடிக்கைகள் உறுதியாக உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "உதயநிதிக்கு ஏற்றவர்களை" அதிக தொகுதிகளில் போட்டியிட்டுப் பின்னர் கட்சியையும் ஆட்சியையும் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள் என்ற பேசுபொருள் தற்போது திமுகவுக்குள்ளும் கூட்டணிக் கட்சிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

தலைமை மாற்றம்

இன்னும் தெளிவாகச் சொன்னவர்கள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். "உதயநிதி இன்றைக்கு ஸ்டாலினைவிட சிறப்பாக செயல்படுகிறார்" என்று அவர் சென்னையில் நடந்த திமுக அறிவுத் திருவிழா மேடையில் பாராட்டினார். அதையும் தாண்டி, "ஒருநாள் அவர் ராஜேந்திர சோழனாக உயர்வார்" என்று நேராகச் சொல்லியதும், திமுக எந்தத் திசையில் செல்கிறது என்பதை மேலும் தெளிவாக்கியது. சோழ வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், ராஜராஜ சோழனை விடப் பெரிதாக பேரரசை விரிவுபடுத்தியவர் ராஜேந்திரன் என்பதை அறிந்திருப்பார்கள். அதனால்தான் இந்த ஒப்பீடு சாதாரணது அல்ல.

துரைமுருகன் உரை

துரைமுருகன் மட்டும் அல்ல. கே.என்.நேரு, பொன்முடி, வேலு போன்றோர் சொல்லாலும் செயலாலும் உதயநிதியின் முன்னேற்றத்திற்கு திறந்த ஆதரவு அளித்து வருகின்றனர். திமுக மூத்த தலைமுறை கருணாநிதி-ஸ்டாலின் காலத்தை பார்த்தவர்கள். அந்த அனுபவத்திலிருந்தே, அடுத்த தலைமுறை யாரெனவும் அவர்கள் அறிந்து செயல் படுகின்றனர். இதற்கு கூட்டணிக் கட்சி தலைவர்களும் விதிவிலக்கல்ல. சென்னை கிழக்கு மாவட்ட திமுக நடத்திய உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் சொன்ன, "இருளுக்கு பின் உதயம் வரும்... உதயநிதியும் வருவார்" என்ற உரை, எதிர்கால முதலவர் அவர் என்ற செய்தியை வெளிப்படையாக ஒத்திகை செய்தது போலவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.