“கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றிபெறும்” - செந்தில்பாலாஜி உறுதி

“கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றிபெறும்” - செந்தில்பாலாஜி உறுதி

“அடுத்தாண்டு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும்” என கோவை சிங்காநல்லூர் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து செந்தில்பாலாஜி பேசினார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தொகுதி அலுவலகம், காமராஜர் சாலையில் உள்ள ஸ்ரீராமானுஜம் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்று தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 29-ம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். கோவை வரும் முதல்வருக்கு நாம் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். கோவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக மற்றும் எதிர்கட்சியினர் பெற்ற வாக்குகள், வித்தியாசங்களை வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள், அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

மாற்று சிந்தனையில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும். பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டம் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தலில், கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக நிச்சம் வெற்றி பெறுவோம். இதற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இந்நிகழ்வில், கோவை எம்.பி கணபதி ப.ராஜ்குமார், மாநில தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.