திருப்புவனத்தில் 5 பேரை கடித்து குதறிய தெரு நாய்! பொதுமக்கள் அச்சம்!

திருப்புவனத்தில் 5 பேரை கடித்து குதறிய தெரு நாய்! பொதுமக்கள் அச்சம்!

திருப்புவனம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தெரு நாய் கடித்து 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்புவனத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சுந்தராம்பாள் இன்று காலை வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, திடீரென வந்த வெறி நாய் அவரை கடித்துள்ளது. இதனால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் சுந்தராம்பாள் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து, அவரை மேலும் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதே நேரத்தில், அந்த நாய் நெல்முடிக்கரை பகுதியிலும் சுற்றித் திரிந்து மேலும் நான்கு பேரை கடித்ததாக கூறப்படுகிறது. நாய் கடியால் சரசு, ஹேமலதா, ஈஸ்வரி, செல்வம் ஆகிய நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சரசு மற்றும் ஹேமலதா ஆகியோர் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதால் முதலுதவி செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் திருப்புவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஒரே வார்டில் ஐந்து பேருக்கு மேல் நாய் கடித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலங்களில் தெரு நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெருநாய்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வெறிநாய் கடியால் ஏற்படும் 'ரேபிஸ்' நோய் தாக்கி, உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.