தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை சாத்தியமில்லை: அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை சாத்தியமில்லை: அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை மட்டுமே தயாரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருப்பது மிகவும் முன்கூட்டியே நடந்துள்ளது'' என தெரிவித்தனர். அத்துடன், 'திட்ட அறிக்கை தொடர்பாக நிபுணர்களை கொண்ட குழுவின் கருத்துக்கு பின்னர்தான் இறுதி முடிவு எடுக்கப்படும். அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் (CWC) அங்கீகரித்தால், சட்டப்படி அதனை அணுகலாம்'' என தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்க மறுத்து, இது தொடர்பான வழக்குகளை முடித்துவைத்தனர்.

இந்நிலையில், மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவை பெறாமல் தமிழ்நாடு அரசு தோல்வி அடைந்ததாக எதிர்கட்சிகள் விமர்சனம் வைத்தன.

இச்சூழலில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக அரசு தளர்வாக நடந்து கொள்கிறது என எழும் விமர்சனங்களை கடுமையாக எதிர்த்தார்.

மேகதாது அணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''தமிழ்நாட்டின் உரிமையை கைவிடும் வகையில் அரசு நடந்துகொள்ளவில்லை. அதுபோன்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. தமிழ்நாட்டில் பைத்தியக்கார தனமாக பேசுபவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அல்லது ஆணையம் எந்த முடிவும் எடுத்தாலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடிய நிலையே இல்லை என்று பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இது போன்ற தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்ட பிறகும், சிலர் மீண்டும் மீண்டும் ஒரே குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் காரணம் புரியவில்லை'' என்றார்.