நடுரோட்டில் கொடூர கொலை செய்த கும்பல்: ஒருவரை அதிரடியாக சுட்டுப் பிடித்த போலீசார்!

நடுரோட்டில் கொடூர கொலை செய்த கும்பல்: ஒருவரை அதிரடியாக சுட்டுப் பிடித்த போலீசார்!

 இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே கும்பலாக சேர்ந்து ஒருவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜய்குமாரை மயிலாப்பூர் போலீசார் இன்று காலை சுட்டுப் பிடித்தனர்.

மயிலாப்பூர் விசாலாட்சி தோட்ட பகுதியை சேர்ந்தவர் மௌலி (28). இவர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.20) இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மௌலி நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டியுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மௌலியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.21) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் விஜயகுமார் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் இன்று காலை விஜயகுமாரை பிடிக்க முற்பட்டனர். அப்போது, விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதனால் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தனது துப்பாக்கியால் விஜயகுமார் காலில் சுட்டுப் பிடித்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவுடி விஜய்குமார், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளார். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விஜயகுமார் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.