சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்; முக்கிய நபர் கைது

சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்; முக்கிய நபர் கைது

 சபரிமலை கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

மேலும், தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மறு புறம் தேவசம் போர்டின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு இன்று கைது செய்துள்ளது. எஸ்பி பிஜோய் தலைமையிலான போலீசார், போத்தியிடம் நடத்தப்பட்ட நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை நாளை மதியம் ரன்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.