ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சனுக்கு இழைக்கப்பட்ட அநீதி - தேர்வாளர்களை சாடிய சடகோபன் ரமேஷ்!

ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சனுக்கு இழைக்கப்பட்ட அநீதி - தேர்வாளர்களை சாடிய சடகோபன் ரமேஷ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அக்டோபர் 19ஆம் தேதியில் இருந்தும், அதனைத் தொடர்ந்து டி20 தொடரானது அக்டோபர் 29ஆம் தேதியும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

இதில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, கேப்டன் பதவியில் இருந்து அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் மற்றொரு அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஷுப்மன் கில் தொடர்ந்து ரன்களைச் சேர்ப்பதால் அவருக்கு பதவி வழங்கும் நீங்கள், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் ஜடேஜாவை புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்? என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை, அடுத்த போட்டியிலேயே கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஏனெனில் அத்தொடரில் அவர் கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது கேப்டன்சி சாதனைகளைப் பார்த்தும் தேர்வாளர்கள் எவ்வாறு இந்த முடிவை எடுத்தனர் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா குறித்து பேசிய ரமேஷ், "ரவீந்திர ஜடேஜா அணியில் தேர்வு செய்யப்படாதது பெரும் கேள்வியாக உள்ளது. அதிலும், தேர்வாளர்கள் அதற்கான விளக்கத்தைக் கொடுத்ததை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஏனெனில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலேயே, கூடுதல் ஸ்பின்னர் தேவை என்பதால் மட்டுமே ஜடேஜா அணியில் இருந்தார் என்று கூறியதை நிச்சயம் ஏற்க முடியாது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா ஒரு ஜாம்பவான். அப்படியான ஒருவரை இவ்வாறு நடத்துவது நியாயமில்லை. ஒருபக்கம் ஷுப்மன் கில் தொடர்ந்து ரன்களைச் சேர்ப்பதால் அவருக்கு பதவி வழங்கும் நீங்கள், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் ஜடேஜாவை புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?"என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் இடம் குறித்து பேசிய ரமேஷ், "சஞ்சு சாம்சன் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க மண்ணில், அந்த அணிக்கு எதிராக சதம் விளாசி அசத்தி இருந்தார். ஆனால் அதன்பின் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படாதது அநீதியாகும். ஏனெனில் அதன்பின் ரிஷப் பந்த் கம்பேக் கொடுத்ததால் அவருக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சதம் விளாசிய துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள், சஞ்சு சம்சனுக்கு மட்டும் மேலும் ஒரு வாய்ப்பை தராதது ஏன்? அதிலும் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனை பயன்படுத்தும் நீங்கள், ஏன் ஒருநாள் அணியில் அவருக்கு அந்த வாய்ப்பை தர மறுக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.