முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்கிறேன் - டி.டி.வி.தினகரன்
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமமுக அவசரக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது" என்றார்.
தொடர்ந்து தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் முறைப்படி டி.டி.வி.தினகரன் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற, எங்களின் பழைய சண்டைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றாக பயணிக்க உள்ளோம். இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் " என்றார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அவர் தான். அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் எங்களுக்கு தயக்கமில்லை. இபிஎஸ்-ஐ சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவரை நிச்சயம் சந்திப்பேன். வரும் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் அமையும். அந்த கூட்டணி அரசில் அமமுக நிச்சயம் இடம்பெறும்" என்றார்.
இதனிடையே கூட்டணியை உறுதி செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் கூறும்போது, "டி.டி.வி. தினகரன் பாஜக கூட்டணிக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. நிச்சயம் இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். தினகரனை பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது மிகச் சிறப்பாக பணியாற்றினார். அவரின் வருகை பாஜக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும்" என்றார்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என பதிவிட்டுள்ளார்.