பூரி ஜெகன்னாத் - விஜய் சேதுபதி இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு - விரைவில் டைட்டில் ரிலீஸ்!
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், புரமோஷன் பணிகளை படக்குழு விரைவில் தொடங்கவுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'தலைவன் தலைவி' படம் கடைசியாக வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு நாயகியாக சம்யுக்தா நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான இசையால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தை பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் உடன் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures) நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கின்றனர். அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டது.
அந்த வீடியோவில், படத்தின் இயக்குநர் பூரி ஜெகன்னாத், விஜய் சேதுபதி இணைந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் விஜய் சேதுபதி, 'பூரி ஜெகன்னாத் உடனும், படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும், இதன் பின்னர் அவர்களை கண்டிப்பாக மிஸ் செய்வேன்' என்று உருக்கமாக கூறியுள்ளார்.
பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி உள்ளிட்டோரும் இதேபோல் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியது இந்த வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகமும் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.