திருவண்ணாமலை அருகே பெற்ற தந்தையை மகன் கொடூரமாக தலையணையை அழுத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் முருகத்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 78 வயதான மண்ணு. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மக்கள் இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது மகன் பாலசெந்தில் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மகன் பாலசெந்தில் குடியும் கூத்துமாக நேரத்தை செலவழித்து வந்துள்ளார். காலை எழுந்தவுடன் குடி என்பதுதான் அவரது தாரக மந்திரம். குடிக்க வில்லை என்றால் கைகள் நடுங்கும் அளவுக்கு சென்று விட்ட அவர், அதற்காக பலரிடம் கடன்வாங்கி போதையில் வலம் வருவதையே வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால் கடன் தொகை எல்லை மீறிச் சென்றதை அவரது போதை ஏறிய தலைக்கு ஏறவே இல்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? ஒழுங்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என்று நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். நாலாபுறமும் கடன் காரர்கள் கழுத்தைப் பிடிக்க வேறு வழி இல்லாத பால செந்தில் தந்தையிடம் சென்று சொத்தை விற்று தருமாறு வற்புறுத்த ஆரம்பித்தார். ஆனால் அவரோ.. தன் வாழ்நாள் சேமிப்பை அப்படியெல்லாம் எடுத்துக் கொடுத்து விட முடியாது என மறுப்பு தெரிவித்ததுடன், குடியை நிறுத்தி விட்டு வேலைக்குப் போ என அறிவுரை கூறியிருக்கிறார்.
இதனால் தலைக்கேறிய ஆத்திரத்துடன் வெளியே சென்றவர் கட்டிங்கை போட்டு வந்து வைத்துக் கொள்கிறேன் என கருவிக் கொண்டு சென்றிருக்கிறார். சம்பவத்தன்று படுத்திருந்த தந்தையை தட்டி எழுப்பி சொத்தை விற்று பணம் தர முடியுமா? முடியாதா? என்று கராறாக கேட்டிருக்கிறார். அவரும் முடியாது எனக் கூற. ஆத்திரம் தலைக்கேறிய பாலசெந்தில் தந்தை என்றும் பாராமல் தலையணையை எடுத்து முகத்தில் அழுத்தி மூச்சு திணற திணற கொலை செய்துள்ளார்.
முனகல் சத்தம் கேட்டு வீட்டில் நுழைந்த மண்ணுவின் உடன் பிறந்த சகோதரரான ராமதாஸ் "என் அண்ணனை என்னடா செய்தாய்.. ஐயோ கொன்று விட்டாயா" என்று கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாலசெந்திலை மடக்கி பிடித்துக் செய்யாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம போலீசார் நடத்திய விசாரணையில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சொத்து தகராத காரணமாக பெற்ற தந்தையை தலையணை வைத்து மூச்சுத் திணற திணற அழுத்தி கொலை செய்த மகனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.