ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை... திருச்சியில் சோகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை... திருச்சியில் சோகம்

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (67). இவரது மனைவி செண்பகவல்லி (65). இருவரும் தங்களது மகள்கள் பவானி (42), ஜீவா (37) ஆகியோருடன் கடந்த 10 ஆம் தேதி ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் கரையில் அமைந்துள்ள யாத்திரி நிவாஸில் (யாத்திரிகர்கள் தங்கும் விடுதி) வந்து தங்கியுள்ளனர்.

அவர்கள் கடந்த நான்கு நாட்களாக அறையை விட்டு வெளியே வரவில்லை. அறை உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை பார்த்ததும் ஊழியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 4 பேரும் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து அழுகிய நிலையில் கிடந்த 4 பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சுவாமிநாதனின் இரு மகள்களும் மனநிலை சரியில்லாதவர்கள் என்றும், இதற்காக சுவாமிநாதனின் குடும்பத்தினர் கோயில் கோயிலாக சென்று பரிகாரம் செய்தும், வழிபாடும் செய்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் தான் அவர்களுக்கு குணமாகாததால் மனம் உடைந்து சுவாமிநாதனின் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.