சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலக்கூடிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026ஆம் ஆண்டு வரக்கூடிய பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.17ஆம் தேதி தேர்வுகள் தொடங்கப்படுகின்றன. இதில் 10ஆம் வகுப்புக்கு மார்ச் 10ஆம் தேதியன்றும், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 9ஆம் தேதியன்றும் தேர்வுகள் நிறைவடைகின்றன. இதுதொடர்பான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் முதன்முதலாக இந்த முறை தேர்வுகள் தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, ஒவ்வொரு பாடத்தேர்வுகளுக்கும் இடையே தயார் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு தேதிகளை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை முடிக்கும் நாள் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளிலும் சிறப்பாக பங்கேற்க முடியும். ஒரே நாளில் இரண்டு பாடங்களுக்கான தேர்வுகள் வராமல் இருக்கும் வகையில் தேர்வு தேதிகள் முறையாக திட்டமிடப்பட்டுள்ளன.
அனைவருக்குமான அறிவுரைகள்!
சிபிஎஸ்இ தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கப்படும். எனவே அதற்கேற்றாற்போல் மாணவர்கள் முன்கூட்டியே சரியாக திட்டமிடுவதன்மூலம் பதட்டத்தை போக்கி மன நிம்மதியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு தேதிகளை கருத்தில்கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மற்ற வகுப்பு மாணவர்களின் படிப்புகள் பாதிக்கப்படாத வகையில் தேர்வுத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் திட்டமிட்டு செல்ல வேண்டும். இந்த முறை 110 நாட்களுக்கு முன்பே தேர்வு தேதிகள் வெளியாகி உள்ளதால், தேர்வுக்கு தயாராக போதிய நேரம் கிடைத்திருக்கிறது. எனவே திட்டமிட்டு படிப்பதற்கான அட்டவணைகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தயாரித்துக் கொடுக்கலாம். மேலும், தேர்வு மையமாக நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள், தங்கள் பள்ளிகளின் செயல்பாடுகளை திட்டமிட்டு மற்ற வகுப்பு மாணவர்களுக்கான பாட வகுப்பு நேரத்தையும் சரியாக ஒதுக்க வேண்டும்.
மாணவர்களின் JEE (முதன்மை) மற்றும் XI வகுப்பு தேர்வுகள் ஒன்றாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக NTA, JEE (முதன்மை) விண்ணப்பத்தில் XI வகுப்பு மாணவரின் பதிவு எண்ணை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 22 லட்சம் பேரும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15 லட்சம் பேரும் தேர்ச்சியடைந்து வெளியில் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.