தொடர்மழை: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 80 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேலும், 65 கால்நடைகள் உயிரிழந்தன.
டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை மழை இல்லாத நிலையில், பிற்பகலில் சிறிது நேரம் வெயில் அடித்தது.
பின்னர், லேசான தூறல் இருந்தது. இந்தத் தொடர் மழையால் மாவட்டத்தில் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு ஏதுவாக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், நீர் வேகமாக வடிந்து வரும் நிலையில், 2 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்களில் மழைநீர் வடியாமல் தேங்கி பயிர்கள் அழுகி வருகின்றன.
இதேபோல, 200 ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்களும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரையிலான ஒரே நாளில் 46 குடிசை வீடுகள், 34 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 80 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், 65 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு ஆகிய கிராமங்களில் போர்வெல் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் தாளடி இளம் நெற்பயிர்களும் மழைநீர் தேங்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.