கிருஷ்ணா நடிப்பில் உருவாகும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தை ஜெய் அமர் சிங் இயக்குகிறார். இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா (விஜய் டிவி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது, “நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட் படித்து விட்டு சென்னையில் இயக்குநர் அகமது அவர்களிடம் “என்றென்றும் புன்னகை” படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும்.
எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம்” என்றார்.