ஆங்கிலத் தலைப்பு வைத்தது ஏன்? - ‘டார்க் ஹெவன்’ இயக்குநர் விளக்கம்

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள படம், ‘த டார்க் ஹெவன்’. கோதை என்டர்டெய்ன்மென்ட், எஸ்.எம்.மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ளது. பாலாஜி இயக்கியுள்ளார். சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன், விஜய் சத்யா, ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சக்திபாலாஜி இசையமைத்திருக்கிறார். இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மித்ரன் ஜவஹர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, ” சினிமாவுக்கு வந்த பிறகுதான் சினிமாவில் உள்ள பிரச்சினைகள் எனக்குத் தெரிந்தன. ஒரு முடிவிலிருந்து யாருமே மீண்டு எழுந்து வர மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி முடிவில் இருந்து மீண்டும் தொடங்கி இந்தளவுக்குப் படத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். முதலில் இதில் நடித்த ஹீரோ செய்த பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல், அவருக்குப் பதில் சித்து நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை கொடுக்கும். தர்ஷிகாவுக்கும் இது நல்ல படமாக இருக்கும். இந்தப் படத்துக்கு ஆங்கிலத் தலைப்பு வைத்தது பற்றி கேட்கிறார்கள். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் வைத்துள்ளேன். ஏன் இத்தலைப்பு என்பது படம் பார்க்கும்போது புரியும்” என்றார்.