'பராசக்தி' என்ன சரித்திர படமா? நான் பார்ப்பதாக இல்லை - கடுகடுத்து பேசிய கார்த்தி சிதம்பரம்

'பராசக்தி' என்ன சரித்திர படமா? நான் பார்ப்பதாக இல்லை - கடுகடுத்து பேசிய கார்த்தி சிதம்பரம்

பராசக்தி படம் என்ன சரித்திர படமா? பராசக்தியோ, ஜனநாயகனோ இரண்டு படத்தையும் நான் பார்ப்பதாக இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கடுகடுத்து பேசினார்.

கோவை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே அரசு என்பது இருக்க முடியும். ஆனால் ஜனநாயக முறையில் இயங்கும் நம் நாட்டில் அப்படி இருக்க முடியாது. எனவே நமது ஆட்சி முறைக்கு அது எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரைக்கும் தேர்தலுக்கு அவ்வளவு பெரிய செலவுகள் ஆவது இல்லை. ஆண்டுக்கு 5 முதல் 6 தேர்தல்கள் நடப்பது நல்லது. அடிக்கடி தேர்தல் வருவதால் தான் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும், அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருப்பார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் வந்தால் ஆட்சியில் இருப்பவர்கள் மெத்தனமாக இருப்பார்கள். மாநில தேர்தல் மூலமாக சில சமயம் மக்கள் மத்திய அரசுக்கு சில பாடத்தை புகட்டுவார்கள். அடிக்கடி தேர்தல் வந்தால் தான் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடிகிறது.'' என்றார்.

தற்போதைய திரைப்படங்கள் சர்ச்சை குறித்து பேசிய அவர், '' பராசக்தியோ, ஜனநாயகனோ இரண்டு படத்தையும் நான் பார்ப்பதாக இல்லை. திரைப்படத்தை வைத்து தமிழ்நாடு அரசியலை நிர்ணயம் செய்யலாம் என நினைத்தால், 'அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்' எப்போதோ தமிழ்நாடு முதலமைச்சராகி இருப்பார்.

ஒரு காலத்தில் அவரது திரைப்படங்கள் இங்கு நன்றாக ஓடியது. என்னை பொருத்தவரை இரண்டு படத்தையும் வியாபார நோக்கில் எடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு லாப நஷ்டம் வருவது குறித்து எனக்கு கவலை கிடையாது. அந்த இரண்டு படத்தையும் நான் பார்ப்பதாக இல்லை. பராசக்தி படம் என்ன சரித்திர படமா? தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இது தேவையற்ற பிரச்சனை. தமிழ்நாட்டில் தேவையான பிரச்சனைகள் நிறைய உள்ளன.'' என்றார்.

'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது குறித்து பேசிய அவர், '' இது புதிதானது ஒன்றும் அல்ல, எல்லா அரசியல் கட்சிக்கும் உள்ள எதார்த்த எதிர்பார்ப்பு தான். எங்கள் பிரதிநிதிகள் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். கணிசமானவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் கட்சி உள்ளது.

கடந்த 1967-லிருந்து காங்கிரஸ் நேரடி ஆட்சியில் இல்லை என்பதால் அன்று முதல் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. சில சமயங்களில் வாய்ப்பு வந்தது, ஆனால் அதை நழுவ விட்டோம். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது புதுமையான கருத்து கிடையாது. தேர்தலை சந்திக்கின்ற ஏதாவது ஒரு கட்சிக்கு இந்த எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா?'' என்றார்.

விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியின் பதிவு குறித்து பேசிய அவர், '' ராகுல் காந்தி நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பார். அதன் அடிப்படையிலேயே விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறார். மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு இருக்கிறது. அதனால் வாக்குகள் கிடைக்கும், ஆனால் அந்த ஓட்டு சீட்டாக மாறுமா என்பது எனக்கு தெரியாது.

விஜய்யை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைத்து தான் ரசிகர் கூட்டம் வருகிறதே தவிர, அவரது கொள்கை பிரகடனத்தை கேட்க வரவில்லை. அவர் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதற்காக கூட்டம் வருகிறது. அதே வேளையில் அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சை கேட்பது என்பது வெகுவாக குறைந்துள்ளது. இன்று மீடியா வளர்ச்சி காரணமாக நீண்ட நேர பேச்சை யாரும் கேட்பதற்கு தயாராக இல்லை. அண்மையில் குஜராத்தில் கிரிக்கெட் போட்டி நடந்த போது விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் பயிற்சி செய்வதை பார்ப்பதற்காக நிறைய பேர் சென்றார்கள். இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இந்த நிலை உள்ளது.'' என கூறினார்.