மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம் - தமிழ்நாடு அரசு
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் நடப்பாண்டு பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம் விடுவிக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடகிழக்குப் பருவ மழை நவம்பர், டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டபோது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதிசெய்து, அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து நிவாரணத்தொகை வேண்டி கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
இதன்படி, வேளாண் பயிர்கள் 4.90 இலட்சம் ஏக்கரும், தோட்டக்கலைப்பயிர்கள் 76,132 ஏக்கரும் என மொத்தம் 5.66 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டது என கணக்கிடப்பட்டது. இக்கணக்கெடுப்பின்படி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக 289.63 கோடி ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3.60 லட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட 2.80 இலட்சம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு 254.38 கோடி ரூபாயும், பாதிக்கப்பட்ட 80,383 தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்கு 35.25 கோடி ரூபாயும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை, விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.