ஆரம்பாக்கம் சிறுமி போக்சோ வழக்கு; வடமாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

ஆரம்பாக்கம் சிறுமி போக்சோ வழக்கு; வடமாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வட மாநில நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜூலை 12ஆம் தேதி ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சிறுமி தனியாக நடந்து சென்றதை பார்த்த இளைஞர் ஒருவர், அந்த சிறுமியை பின்தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் 15 தனிப்படைகள் அமைத்து, திருவள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், 15 நாட்களுக்கு பிறகு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் ராஜு பிஸ்வகர்மா (35) என்பதும், அவர் அசாமை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டி உறுதி செய்த போலீசார், அவர் மீது போக்சோ பிரிவு உட்பட 65(2), 87, 351(3), மற்றும் 5(i), 5(1),5(m), 6(1), 11(1), 11(4) 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 5 மாதங்களாக நடந்து வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிக்கு ரூ.1.45 லட்சம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிவாரணமும் வழங்கவும் உத்தரவிட்டார்.

பல பெண்களிடம் சில்மிஷம்

இந்நிலையில், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா கூறுகையில், "ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது பெற்றோர்கள் நேபாளத்தை சேர்ந்தவர்கள். பின்னர் இவர்களின் குடும்பம் அசாமுக்கு குடிப்பெயர்ந்தது.

ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை அருகே உள்ள பஞ்சாபி தாபாவில் இவர் வேலை செய்து வந்திருக்கிறார். அசாமில் ஒரு பெண்ணை திருமணம் செய்து 18 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். அங்கும் 40 வயது பெண்ணுடன் உறவில் இருந்திருக்கிறார்.

பின்னர் சூலூர்பேட்டை திரும்பிய ராஜு, கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஆரம்பாக்கத்திற்கு ரயிலில் வந்து இறங்கியுள்ளார். ஊரை சுற்றி பார்த்துக் கொண்டு வரும் வழியில், மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, மதியம் 12:55 மணிக்கு அவ்வழியாக வந்து கொண்டிருந்த குறிப்பிட்ட சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். சிசிடிவி காட்சி அடிப்படையில் அவரை ஆந்திராவுக்கு சென்று கைது செய்தோம்" என எஸ்.பி. விவேகானந்தா சுக்லா தெரிவித்தார்.