சாக்குமூட்டையில் கட்டி தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை!

சாக்குமூட்டையில் கட்டி தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை!

தீபாவளியன்று ரயில்வே தண்டவாளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தை, தத்து கொடுப்பதற்காக குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், பிறந்து 2 மாதங்களே ஆன அழகிய பெண் குழந்தை ஒன்றை தீபாவளி திருநாளன்று (அக்.20) சாக்குப்பையில் வைத்து அடையாளம் தெரியாத நபர் யாரோ வீசி சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற குத்தாலம் கீழக்காலணியை சேர்ந்த சேகர் என்பவர், குழந்தை அழுகை சத்தத்தைக் கேட்டு சாக்குப்பையை திறந்து பார்த்துள்ளார்.

அதில், பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சேகர், அதனை உடனடியாக மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார். உடனே மருத்துவமனை தரப்பில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விரைந்து வந்த குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நல்ல நிலையில் இருந்த பெண் குழந்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

மேலும், தத்துப்பிள்ளை கேட்டு தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்துள்ள தம்பதிகளிடமோ அல்லது குழந்தைகள் காப்பகத்திடமோ முன்னுரிமை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் வாயிலாகக் குழந்தை ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

’தொட்டில் குழந்தை திட்டம்’ என்பது பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் 1992-ல் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். அதாவது, பெண் சிசுக்கொலைகளை தடுப்பதற்காகவும், பிறந்த குழந்தைகள் கைவிடப்பட்டால் அவர்களை காப்பகங்களில் வைத்து பாதுகாத்து, தத்தெடுக்கும் திட்டத்தின் மூலம் தம்பதிகளுக்கு வழங்கும் முறையை அரசு செயல்படுத்தி வருகிறது.

தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.