தமிழ்நாட்டில் வேட்டையாடி பறவைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தொடங்கும் கணக்கெடுப்பு
தமிழ்நாட்டில் உள்ள வேட்டையாடி பறவைகளின் (Predatoy Birds) எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி, வரும் 31ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தமிழக வனத்துறை சார்பில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
உலகம் இயங்குவதற்கு அதில் வசிக்கும் ஒவ்வொரு உயிரினமும் அவசியம் என்பதே இயற்கையின் நியதி. சிறியது, பெரியது என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து உயிரினங்களும் இந்த உலகின் சமநிலையை பாதுகாக்க தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கி வருகின்றன.
உதாரணமாக, தேனீ என்ற பூச்சியினம் முற்றிலுமாக இல்லாமல் போனால், உலகமே வறட்சியில் அழிந்து போகும் என அறிவியல் கூறுகிறது. எனவேதான், யானைகள் முதல் சிட்டுக்குருவிகள் வரை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க உலக நாடுகள் பெரிய அளவில் முனைப்புக் காட்டி வருகின்றன.
அழிந்து வரும் வேட்டையாடிகள்
அந்த வகையில், தற்போது உலக அளவில் அழிவின் விளம்பில் இருக்கும் உயிரினங்களில் ஒன்றுதான் வேட்டையாடி பறவைகள். சிறு விலங்குகள், பாம்புகள், பல்லிகள், பிற பறவைகளை வேட்டையாடி உண்ணும் பறவைகள்தான் இவை. கழுகு, ஆந்தை, வல்லூறு, பருந்து உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உலகுக்கே பேராபத்து
வேட்டையாடி பறவைகளின் அழிவானது, உணவுச் சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இயற்கை சமநிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உலகம் பேராபத்தை சந்திக்கும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் அவற்றை பாதுகாக்க இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் வேட்டையாடி பறவைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. "இந்த கணக்கெடுப்பின் மூலம் தமிழகத்தில் வேட்டையாடி பறவைகளின் வாழ்விடம், அவற்றின் இப்போதைய நிலை, அவை சந்திக்கும் அச்சுறுத்தல்கள், அவற்றை பாதுகாக்க தேவையான விஷயங்கள் ஆகிய அம்சங்கள் குறித்து ஒரு தெளிவான தரவு கிடைக்கும்" என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.