வடகிழக்கு பருவமழை; தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு!

வடகிழக்கு பருவமழை; தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு!

வடகிழக்கு பருவமழை காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், '' மாணவர்கள் பள்ளிக்கு மிதிவண்டிகளில் வரும் போது சகதிகளில் வழுக்கி விழக்கூடிய அயாயத்தை எடுத்துக்கூறி பாதுக்காப்பாக வர அறிவுரை கூற வேண்டும்.

  • மழைக்காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.
  • மழை காரணமாக பள்ளியில் ஏதேனும் வகுப்பறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைப்பதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறும் கண்காணிக்க வேண்டும்.
  • தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் எவரும் சுவர் அருகில் செல்லாதவாறு கண்காணிக்கவும் வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில், அவை பாதுகாப்பான முறையில் மூடப்பட்டு உள்ளனவா? என்பதை உறுதி செய்வதுடன் மாணவர்கள் அவற்றின் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
  • பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா? என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும். அவ்வாறு தேங்கும் பட்சத்தில் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
  • மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளுக்கு அருகில் செல்வதையும் அவற்றில் குளிப்பதையும் தவிர்த்திட அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.
  • பள்ளியை விட்டுச் செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் மின்வாரியப் பொறியாளர்களை உடனடியாக தொடர்புகொண்டு அவைகளை உடனடியாக அகற்ற ஆவண செய்ய வேண்டும்.
  • சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா? மழைநீர் படாத வகையில் உள்ளனவா? என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
  • மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.
  • மழைக் காலங்களில் தங்களை மழையில் இருந்து காத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என்றும் அதனால் மாணவர்களுக்கு இடி, மின்னல் போன்றவைகளினால் ஆபத்து நேரிடக் கூடும் என அறிவுறுத்த வேண்டும்.
  • பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
  • பள்ளி வளாகத்திற்குள்ளும், வெளியிலும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.'' என அதில் கூறியுள்ளார்.