வேலூரில் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு - தனியார் சிகிச்சை மையத்துக்கு சீல்

வேலூரில் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு - தனியார் சிகிச்சை மையத்துக்கு சீல்

வேலூரில் இளைஞருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் தனியார் சிகிச்சை மையம், அதன் அருகே இருந்த அவர்களுடைய மருந்தகம் ஆகியவற்றிற்கு வருவாய் துறையினர் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

அணைக்கட்டு அருகே உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனு(27). இவர் பழ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு நிவேதா என்ற மனைவியும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 16ஆம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஒடுகத்தூரில் உள்ள ஒரு தனியார் கிளிக்கிற்கு சென்றதாகவும், அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், கிளினிக்கில் இருந்த நபர் சீனிவாசனுக்கு இரண்டு ஊசிகள் போட்டு மாத்திரைகள் வழங்கியதாக கூறப்படுகிறது

அதன் பிறகு உடல்நிலை மேலும் மோசமாகவே அவரை குடும்பத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஒடுகத்தூரில் உள்ள தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் சீனு உயிரிழந்தார் என்று கூறி, பொதுமக்கள் கிளினிக்கை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதேபோல் கிளினிக் நடத்தி வந்தவர்களும் சரியாக மருத்துவம் அளிக்காதது விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஒடுகத்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் கிளினிக் மற்றும் அருகே இருந்த அவர்களுடைய மருந்தகம் ஆகியவற்றிற்கு இன்று மருத்துவர்கள், போலீசார், பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் துறையினர் அதிரடியாக ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ஒடுகத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் மற்ற கிளினிக்கிற்கு சென்று அவர்கள் முறையான சான்றிதழ்கள் வைத்துள்ளார்களா?, மருத்துவர்கள் தான் சிகிச்சை பார்கின்றார்களா? என திடீர் ஆய்வை மேற்கொண்டனர். இந்த திடீர் ஆய்வு ஒடுகத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.