வங்கக்கடலில் உருவாகும் புயல்; சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகும் புயல்; சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் உருவாக இருக்கும் சூழலில் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், (தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

அந்த வகையில் ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 17, காக்காச்சி (திருநெல்வேலி) 14, மாஞ்சோலை (திருநெல்வேலி) 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் 29.9° செல்சியஸ், குறைந்தபட்சம் (சமவெளிப்பகுதிகளில்) ஈரோட்டி ல் 18.0 ° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நேற்று (24.11.2025) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (25-11-2025) காலை 8.30 மணி அளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரில் இருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று (24-11-2025) நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (25-11-2025) காலை 5.30 மணி அளவில் குமரிகடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் – இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை – இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.

இன்று (25) மற்றும் நாளை 26 ஆம் தேதி: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27 ஆம் தேதி: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28 ஆம் தேதி: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29 ஆம் தேதி: தமிழகத்தில் அநேக இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30 ஆம் தேதி: வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதி: தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (25-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (26-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (தமிழக கடலோரப்பகுதிகள்):

25-11-2025 மற்றும் 26-11-2025: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27-11-2025 முதல் 29-11-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (வங்கக்கடல் பகுதிகள்):

25-11-2025: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-11-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (அரபிக்கடல் பகுதிகள்):

25-11-2025 மற்றும் 26-11-2025: கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், விவரங்களுக்கு: mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை பார்க்கலாம்'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.