நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்கு எலி காய்ச்சல்! சுகாதாரத்துறை ஆய்வில் அதிர்ச்சி!

திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் இயங்கி வருகிற ஆண்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி மாணவர்களுக்கு காய்ச்சல் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவனுக்கு ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்த போது அவருக்கு எலி காய்ச்சல் (Leptospira) இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காய்ச்சல் ஏற்பட்டுள்ள 7 பேரின் ரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர்கள் அனைவருக்கும் எலி காய்ச்சல் தொற்று இருப்பது உறுதியானது.
காரணம் என்ன?
இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் எலி போன்ற உயிரினங்களின் சிறுநீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த கல்லூரியானது காட்டு பகுதிக்கு நடுவே அமைந்திருப்பதால் கல்லூரியை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் படர்ந்து இருக்கும். இச்சூழலையும் கருத்தில் கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “விடுதியில் உள்ள குடிநீரை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு தொட்டியை சுத்தம் செய்து புதிதாக குடிநீர் வழங்க சுகாதாரத் துறை கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே தொட்டி பராமரிப்பு பணிகள் முடியும் வரை விடுதியை மூடும்படி சுகாதாரத்துறை இயக்குநர் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கல்லூரியை சுற்றி திரளான ஆடு, மாடு போன்ற விலங்குகளும் உள்ளன. அந்த விலங்குகளின் சிறுநீர் தண்ணீரில் கலந்துள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்” என்றார்.
கல்லூரி கேன்டீன் உரிமம் தற்காலிகமாக ரத்து
தொடர்ந்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் கல்லூரி சமையலறையில் பூச்சிகள் மற்றும் பூனைகள் இருப்பது தெரிவந்துள்ளது. மேலும், சமையல் செய்யும் உபகரணங்கள், மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை சுத்தமில்லாமல் பூஞ்சைகள் படர்ந்திருந்ததாகவும், உணவுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்தும் தரையில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக, சமையலறையில் காய்கறிகள் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டன. கல்லூரி வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பு பின்பற்றப்படாததால் துர்நாற்றத்துடன் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உடைந்த ஓடுகள், தண்ணீர் தேங்கிய தரைகள் உள்ளிட்டவைகளும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால் கல்லூரி கேன்டீனுக்கு உணவுத்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்த உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.