மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தம்? அன்பழகன் பரபரப்பு பதில்
தங்களின் கோரிக்கை குறித்து அரசு இறுதி முடிவு எடுக்காவிட்டால் வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் மாலை 5 மணிக்கு மேல் இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பொது போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறுகையில், “கடந்த சில வாரங்களில் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த இரண்டு பெரிய ஆம்னி பேருந்து விபத்துகளில் பல உயிர்களை இழந்துள்ளோம். சிலரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு முழு ஆம்னி பேருந்துத் துறையையே குற்றம்சாட்டுவது கவலைக்குரியது.
இந்தியாவில் தினசரி சுமார் 32 கோடி பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த பெரும் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றுவதில் அரசுப் போக்குவரத்துக்கு துணையாக தனியார் பேருந்துகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநரங்களுக்கு இடையேயான தொலைதூரப் பயணங்களில் மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகியோர் பெருமளவில் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். தனியார் பேருந்துகள் அரசு அங்கீகாரம் பெற்ற உற்பத்தி நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே சாலையில் இயக்க அனுமதிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் சிலர் தவறாக பரப்பும் ஸ்லீப்பர் பேருந்துகள் பாதுகாப்பற்றவை' என்ற வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.
கடந்த மாதம் சென்னையில் இருந்து தென்காசி சென்ற ஆம்னி பேருந்து கோவில்பட்டி அருகில் தீ விபத்துக்குள்ளானது. அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்து ஒசூர் அருகே தீ விபத்துக்குள்ளானது. இரண்டு பேருந்துகளும் முழுவதும் எரிந்த பேருந்து சேதமானாலும் பயணிகளுக்கு ஒருவருக்கு கூட சிறு காயம் இல்லாமல் ஓட்டுனர்கள் பேருந்தின் அவசரகால வழியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். இதுபோல் பல விபத்துகளில் ஓட்டுனர்கள் பயணிகளை பாதுகாப்பாக கையாண்டுள்ளனர்.
இந்த விபத்துகள் நடந்த சில மாநிலங்களில் திடீரென ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக கடுமையான அபராதங்கள் மற்றும் வாகன பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகாவில் தமிழக வாகனங்களுக்கு தலா ரூ.2 லட்சம் சாலை வரி விதிக்கப்பட்டு, 40 பேருந்துகளுக்கு மேல் சிறை பிடிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டது. அதேபோல், ஆந்திராவிலும் கடுமையான நடவடிக்கையால் 100 மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு பின்பு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவ.7 தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற 100 மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு ரூ.70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் இருந்து மாநிலங்களுக்கு இடைய இயக்கப்படும் 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் (50 சதவீத பேருந்துகள்) இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது துறையை முடக்குவதோடு, பொதுமக்களுக்கு போக்குவரத்து சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனி வகை பர்மிட் வேண்டும்
ஆம்னி பேருந்துகளுக்கு என்று தனி வகை பர்மிட் இல்லை. இந்தியா முழுவதும் சுற்றுலா துறை பயன்படுத்தும் பர்மிட் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால், விபத்து ஏற்படும்போது இன்சூரன்ஸ் கிளைம் செய்வதிலும் பல பிரச்சனைகள் உள்ளன. இத்துறையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இன்சூரன்ஸ் கிளைம் ஆகாமல் உள்ளது. தற்போது நகரங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் வரி சிக்கல்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இதற்கான நிரந்தர தீர்வாக மத்திய அரசு, ஆம்னி பேருந்துகளுக்கென தனித்துவமான அனுமதி (Permit) வழங்க வேண்டும். இதனால் மாநிலங்களுக்கு இடையேயான சாலைகளில் சட்டபூர்வ அனுமதியுடன் தடை இன்றி பேருந்துகளை இயக்க முடியும். தேவையற்ற வரி மற்றும் அனுமதி சிக்கல்கள் நீங்கும். பாதுகாப்பு தரநிலைகள் ஒரே மாதிரியாக்கப்படும். இதன் மூலம் பயணிகள் நம்பிக்கையுடன், சௌகரியத்துடன் மற்றும் பாதுகாப்பாக பயணம் செய்யும் சூழல் உருவாகும். யேலும் கட்டண வசூலும் முறைப்படுத்தப்படும்.
ஆம்னி பேருந்துகள் சுற்றுலா, தொழில், கல்வி, மருத்துவம், கலாச்சாரம் போன்ற துறைகளுக்கான முக்கிய இணைப்பாக உள்ளன. எனவே, இந்தத் துறையின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பது பயணிகள் நலனையும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல் ஆகும். ஆம்னி பேருந்துகள் பொதுப் போக்குவரத்து அமைப்பின் அத்தியாவசிய அங்கமாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய சக்தியாகவும் உள்ளன.
மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு, ஆம்னி பேருந்துகளுக்கு தனியான அனுமதியை (Permit) வழங்கி, பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்த வேண்டுகிறோம். எங்களது கோரிக்கை குறித்து மாலை 5 மணிக்குள் அரசு முடிவு எடுக்காவிட்டால் வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது. ஆனால், மாவட்டத்துக்குள் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்” என்றும் தெரிவித்தார்.