பீடி சுற்றி பிள்ளைகளை படிக்க வைத்த தாய்மார்கள்... சிற்பம் வைத்து கொண்டாடும் கோயில்!

ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே அறிவார்ந்து இருக்கும் என்பார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற, குழந்தைகளின் கல்விக்காக பீடி சுற்றும் தொழிலை கையிலெடுத்த பெண்களை போற்றும் வகையில் கோயில் கோபுரத்தில் பீடி சுற்றும் பெண்களை சிற்பமாக வைக்கும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொடி கட்டி பறந்தது பீடி சுற்றும் தொழில். இந்த பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பீடி சுற்றும் தொழிலை பெரும்பாலானோர் இப்போதும் செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பீடி சுற்றும் தொழில் தான் முக்கிய வாழ்வாதாரம்.
ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து கொண்டு வரும் இலைகளையும், தூள்களையும் பீடி நிறுவனங்கள் பெண்களுக்கு வழங்குகின்றன. இலையில் தூளை வைத்து கையால் உருட்டி பீடியாக தயாரிக்கின்றனர் பெண்கள். கடந்த 50 ஆண்டுகளாக பீடி சுற்றிய அம்மாக்களின் உழைப்பில் படித்து முன்னேறிய இளைஞர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. குழந்தைகளின் கல்விக்காகவும், வீட்டுச் செலவுக்காகவும் இன்றும் பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர்.
கடுமையான உழைப்பால் பல்வேறு உடல் பாதிப்புகளையும் தாண்டி குடும்பத்திற்காக பீடி சுற்றி சமுதாயத்தை வளர்த்தெடுத்த பெண்களை கெளரவிக்கும் வகையில், கோயிலில் பெண்கள் பீடி சுற்றுவது போன்ற சிற்பங்கள் வைக்கப்படுகின்றன.
ஒரு தலைமுறையையே கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றியதற்கு இந்த பீடி சுற்றும் தொழில் பெண்களுக்கு கை கொடுத்தது. அதற்கான அங்கீகாரமும் அந்த உழைப்பையும் நினைவுப்படுத்தும் வகையில் இவ்வாறான சிற்பங்கள் கோயில் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
"எனது அம்மா என்னை பீடி சுற்றி தான் படிக்க வைத்தார். அவர் தற்போது என்னுடன் இல்லை. அவர் எனக்காக செய்த பணிக்கு அவரை பெருமைபடுத்தும் வகையில் இந்த சிற்பத்தை நான் பார்க்கிறேன்” என உணர்ச்சி பொங்க ஞானப்பிரியா கூறினார்.
அப்போது வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம், பீடி சுற்றும் தொழில் குறித்து புள்ளிவிவரங்களை எடுத்துரைத்தார். "1950 முதல் 1955 வரை இங்கு கடும் பஞ்சம் நிலவியது. அப்போது வேறு வழியின்றி மக்கள் பீடி தொழிலை குடும்பமாக செய்ய தொடங்கினர். 10 ஆண்டுகளுக்கு முன் 7 லட்சம் பீடி தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது 3.25 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மேலும், 1.75 லட்சம் பேர் பென்சன்தார்களாக உள்ளனர். திருநெல்வேலி, தென்காசி என இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 30 பெரிய பீடி நிறுவனங்களும், 300-க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 4.5 கோடி பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
முக்கியமாக பெண்கள், இந்த தொழிலை தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்திற்காக, வீட்டின் செலவுக்காக தங்களது உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் இந்த வேலையை இன்று வரை செய்து வருகின்றனர்” என்றார்.
தியாகத்தின் மொத்த உருவமான அந்த பெண்களை அடுத்த தலைமுறையினருக்கு காட்ட வேண்டும் என்ற யோசனைக்கு பின் நின்றவர்களுள் ஒருவரான கோயில் நிர்வாகி குமார் நம்மிடம் பேசினார். “இந்த கோயில் சுமார் 10 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் 2000 வரிதாரர்கள் உள்ளனர். அதில் பெரும்பாலனோர் இப்பகுதியில் விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்கள். என் தாய் தந்தை கூட பீடி சுற்றி அதில் இருந்து வந்த பணத்தில் தான் என்னை வளர்த்தனர்” என்றார்.