தமிழ்நாட்டில் மேலும் 15 பொருட்களுக்கு 'புவிசார் குறியீடு' பெற திட்டம்!
தமிழ்நாட்டில் 6 விவசாயப் பொருட்கள், 4 கைவினை பொருட்கள் என மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் வின்சென்ட் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் செயலாளரும், பேராசிரியருமான முனைவர் ச.வின்சென்ட் ஈடிவி பாரத் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ”தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் அறிவு சார் சொத்துரிமையை பெற்று வருகிறோம்.
அதில் காப்புரிமை, புவிசார் குறியீடு, பதிப்புரிமை, வர்த்தகக் குறியீடு, தொழில்துறை வடிவமைப்புகள் ஆகியவை அனைத்தும் சேர்ந்து அறிவுசார் சொத்துரிமை என கூறுகிறோம். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தில் இயங்கும் இந்த மையம் முதற்கட்டமாக 2008இல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 40 அறிவுசார் சொத்துரிமை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழ்நாடு 69 ஆயிரம் காப்புரிமைகளை பெறும் வகையில் முன்னுரிமை பெற்றுள்ளது. இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் இருந்து மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மையத்தின் 40 செல்கள் மூலமாக அந்தந்த பகுதியில் இருக்கிற முக்கியமான பொருள்களை அடையாளம் கண்டறிந்து, இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் 40 பொருட்களுக்கு 4 காப்புரிமை வாங்க உள்ளோம். அப்போது 68 என்பது 108 ஆக அதிகாிக்கும்.
விவசாயப் பொருட்கள் 6, கைவினை பொருட்கள் 4, உற்பத்தி பொருள் 1, உணவு சம்பந்தமாக நான்கு பொருட்கள் என 15 பொருட்களை அடையாளம் கண்டுள்ளோம். அதுகுறித்தும் களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கிறோம். வரும் காலங்களில் கிட்டத்தட்ட 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற இருக்கிறோம். அப்படி வாங்கும் போது புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்கள் எண்ணிக்கை 83 ஆக உயர வாய்ப்புள்ளது.