சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா - 84 நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் பொது நூலகத் துறையின் மூலமாக 84 நூல்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (18.01.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026- இன், நிறைவு விழாவில் தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியம் மூலமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 44 நூல்கள் மற்றும் பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களை உலகளாவிய மேடையில் முன்னிறுத்தும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஜனவரி 16 முதல் 18 வரை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
'நாகரிகங்களுக்கு இடையேயான ஒரு உரையாடல்' (A Conversation between Civilisations) என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டாடப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, குறுகிய காலத்திலேயே உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற இலக்கிய மேடையாக வளர்ச்சி பெற்றுள்ளது.
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2023 ஆம் ஆண்டில், 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, 2024 ஆம் ஆண்டில், 40 நாடுகள் பங்கேற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, 2025 ஆம் ஆண்டில், 64 நாடுகள் பங்கேற்று 1354 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதுடன், சுமார் 135 தமிழ் எழுத்தாளர்களின் 260 நூல்கள், முப்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்வில், தமிழ் மொழியின் தனித்துவமும் சிறப்பும் உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் அளவில் தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026-ன் சிறப்பம்சங்கள்:
தமிழ்நாடு பதிப்பாளர்களுக்கான பிரான்ஸ் அரசின் சிறப்பு அமர்வுகள், TEDA Türkiye என்ற துருக்கிய அரசின் மானியம் பற்றிய கருத்தரங்கு, போலோனியா குழந்தை புத்தகக் கண்காட்சியின் ஓவிய வடிவமைப்பு, கருத்துப்படம் மற்றும் மொழிபெயர்ப்பு அமர்வுகள் நடைபெற்றன. உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் முதல் நம் நாட்டின் சிறந்த எழுத்து ஆளுமைகள் வரை பங்கு பெற்ற இந்த 17 அமர்வுகளில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.