நெல்லை: அல்வா கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
ஐயப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு, நெல்லையில் உள்ள அல்வா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி என்றாலே பெரும்பாலான மக்களுக்கு நினைவுக்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான். குறிப்பாக, லாலா கடைகளில் தயாரிக்கப்படும் அல்வா நாவில் எச்சி ஊறும் அளவுக்கு தனித்துவமான சுவையை கொண்டவை என்பதால், அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நெல்லைக்கு வரும் மக்கள் அல்வாவை விரும்பி வாங்கி செல்கின்றனர். அதனால், மக்களின் தேவைக்கேற்ப திருநெல்வேலி மாநகரில் திரும்பும் இடங்கள் எல்லாம் புற்றீசல் போல் அல்வா கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவு திருநெல்வேலி வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். அப்படி வெளிமாவட்டங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் அல்வா வாங்குவதற்காக திருநெல்வேலி சந்திப்பு மற்றும் டவுன் போன்ற பகுதியில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், இன்றும் டவுன் நெல்லையப்பர் கோயில் முன்பு உள்ள அல்வா கடைகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த சூழலில் மாவட்ட உணவு அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அங்குள்ள அல்வா கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, அல்வாவின் தரம் எப்படி இருக்கிறது? அல்வா தயாரிக்கும் இடம் சுகாதாரமாக உள்ளதா? கடைகளுக்கு லைசென்ஸ் வாங்கியுள்ளார்களா? என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தனர்.
மேலும், கவரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நேந்திரம் சிப்ஸ் பாக்கெட்டுகளில் கடையின் பெயர் மற்றும் சிப்ஸ் தயாரிக்கப்பட்ட தேதி இல்லாததால் சிப்ஸ் பாக்கெட்டுகள், தரமற்ற அல்வாக்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி, பெரும்பாலான கடைகள் குறிப்பிட்ட ஒரே பெயரையே பயன்படுத்தி வியாபாரம் செய்வது கண்டறியப்பட்டது.

ஆகையால், குறிப்பிட்ட அந்த பெயரை பயன்படுத்தாமல், கடை உரிமத்தில் என்ன பெயருக்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளதோ, அந்த பெயரையே கடைக்கு வைக்க வேண்டும். அல்வாவை பார்சல் செய்து கவரில் விற்பனை செய்யும்போது, கவரின் மேல் பகுதியில் கடையின் பெயர், அல்வா தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் எனவும் எச்சரித்தனர். அதையடுத்து, சில கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக கடையின் பெயரை மாற்றினர்.
இந்த அதிரடி சோதனையில், 5-க்கும் மேற்பட்ட சிறிய கடைகள் உரிமம் பெறாமல் அல்வா விற்பனை செய்தது தெரியவந்தது. ஆகையால், அந்த கடைகளில் விற்பனையை நிறுத்தும்படி அறிவுறுத்திய அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்திற்குள் லைசென்ஸ் வாங்க வேண்டும், இல்லையென்றால் கடையில் உள்ள அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்துவிடுவோம் என எச்சரித்து சென்றனர். இச்சம்பவம் அல்வா பிரியர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.