27 நாட்களாக கண்ணாமூச்சி காட்டும் 'ரிவால்டோ' யானை! அச்சத்தில் பொதுமக்கள்!!
நீதிமன்ற உத்தரவுபடி வனப்பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வந்த காட்டு யானை ரிவால்டோ மாயமான சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே உள்ள மாவநல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக காட்டு யானை ரிவால்டோ சுற்றி திரியும். இந்த யானைக்கு கண் பார்வை குறைந்ததாலும், தும்பிக்கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிடித்து வளர்ப்பு யானையாக மாற்றும் பணிகள் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ரேடியோ காலர் கருவி பொருத்தி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அதேநேரம் யானையை தொடர்ச்சியாக கண்காணித்து அது குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தொடர்ந்து வனத்திற்குள் சுற்றி வந்த ரிவால்டோ யானையை வனத்துறையினர் தனி குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சீகூர் பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில், எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. உயிரிழந்தது ரிவால்டோ யானை என வதந்தி பரவிய நிலையில், அது ரிவால்டோ யானை இல்லை என தெரிய வந்தது.
அதேநேரம் ரிவால்டோ யானை கடந்த 27 நாட்களுக்கு மேலாக எங்கே இருக்கிறது எனவும் தெரியாமல் உள்ளது. வனத்துறை குழுவினர் சிங்காரா மற்றும் சீகூர் வனச்சரக பகுதிகளில் தரைவழி தேடுதலாகவும், ட்ரோன் கேமரா உதவியுடன் ரிவால்டோ யானையை தொடர்ச்சியாக தேடி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர், ''ரிவால்டோ யானைக்கு தற்போது மதம் பிடிக்கும் நேரம். கடந்த ஆண்டு 4 மாதங்கள் வரை யானை காணாமல் போய் மீண்டும் இதே பகுதிக்கு வந்திருக்கிறது. யானை அடர் வனப்பகுதிக்குள் செல்ல வாய்ப்பிருப்பதால், அதனை தொடர்ந்து தேடி வருகிறோம்' என தெரிவித்தனர்.
இதன் காரணமாக மசினகுடி, மாவநல்லா பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானை தற்போது 27 நாட்களாக காணவில்லை. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, முறையாக எந்த ஒரு பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை. யானையை வனத்துறையினர் பல குழுக்களாக அமைத்து தேடி வருகின்றனர். எனினும் இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை என்பது சூழலியல் ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக யானையை கண்டுபிடித்து அதன் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்" என வலியுறுத்துகின்றனர்.