ஆட்டிசம் நோய்க்கு தடுப்பூசி காரணமா? - சௌமியா சுவாமிநாதன் பதில்!

ஆட்டிசம் நோய்க்கு தடுப்பூசி காரணமா? - சௌமியா சுவாமிநாதன் பதில்!

தடுப்பூசி போடுவதால் தான் ஆட்டிசம் நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

‘பசுமை புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் குறித்து எழுத்தாளர் பிரியமாதா ஜெயக்குமார் எழுதிய "The Man who Fed India" என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை தரமணியில் இன்று நடைபெற்றது.

இந்த புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.எஸ் சுவாமிநாதன் மகளும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசகருமான சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “இந்த உலகத்தில் தொற்று நோய்களுக்கு தீர்வு இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்தார்கள். குறிப்பாக அம்மை மற்றும் போலியோ நோய்களால் பலர் உயிரிழந்தனர். ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் காரணமாகத்தான் இந்த பிரச்சனைகள் குறைந்துள்ளது.

எச்.பி.வி தடுப்பூசிகள் தமிழக அரசால் 9 - 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு போடப்படவுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், மார்பக புற்றுநோய் போன்ற மோசமான புற்றுநோயால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அதை தடுப்பதற்கு பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவது அவசியமாக உள்ளது.

தடுப்பூசிகளை பொறுத்தவரை அதன் நன்மைகளையும், எதிர்வினைகளையும் பார்க்க வேண்டும். உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தடுப்பூசிகள் நிச்சயம் பாதுகாப்பானதாகதான் இருக்கும். ஆராய்ச்சிகள் மூலம் பல நோய்களுக்கு தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகிறார்கள்.

அதேபோல, 'ஆட்டிசம்' (Autism) என்ற நோய் எதனால் வருகிறது? என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இருந்தாலும், பல காரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கிறது.. ஆனால் ஆதாரம் கிடைக்கப்படவில்லை. இருந்தாலும் தடுப்பூசியால் ஆட்டிசம் ஏற்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

புத்தகம் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நபர்கள் (ETV Bharat Tamil Nadu)

முன்னதாக, ‘தடுப்பூசி போடுவது ஆட்டிசம் குறைபாட்டுக்கு மிக முக்கிய காரணியாக உள்ளது’ என்று அமெரிக்காவை சேர்ந்த McCullough Foundation என்ற அமைப்பு ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு முடிவை ஆதரித்து, Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

அதில், “பெற்றோர்கள் இந்த ஆய்வு முடிவை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அதிகமாக தடுப்பூசிகளை நாம் கொடுத்து வருகிறோம். ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு தடுப்பூசி செலுத்துவது முக்கிய காரணம்” எனக் கூறியுள்ளார். இது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.