SIR-க்கு எதிராக நடந்த கூட்டம்; அனல் பறந்த கருத்துக்கள்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
''SIR'' க்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நவம்பர் 4ம் தேதி தேர்தல் ஆணையம் தொடங்குகிறது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, வி.சி.க., மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைவர்கள் கருத்து
இந்த கூட்டத்தில் விசிக சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், '' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்வதற்கு முதல்வர் எடுத்துள்ள அவசர நடவடிக்கையை விசிக வரவேற்கிறது. இதனை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் என்பது குறித்து முதல்வர் வரைவு தீர்மானமாக முன்மொழிந்திருக்கிறார். இது வாக்குரிமையை குறி வைத்து நிகழ்த்தப்படுகிற ஒரு தாக்குதல் அல்ல, குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படுகிற ஒரு தாக்குதல். இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். தேர்தல் ஆணையம் இந்த பணியை செய்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. தேர்தல் நடைபெறவுள்ள ஓர் ஆண்டில் இதனை செய்யக்கூடாது என்பது சட்டம் இருக்கிறது. தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் நடத்த வேண்டும் அல்லது தேர்தலுக்கு பின்னால் நடத்த வேண்டும்.'' என கூறினார்.
கமல்ஹாசன்
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே SIR ஏன் கொண்டு வரப்படுகிறது?. வாக்காளர் பட்டியலை சரி செய்வதற்காக இவை நடக்கிறதா? அல்லது வேறு ஏதும் உள்ளதா? என சந்தேகம் எழும்புகிறது. தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவு குறைந்துவிட்டது. கர்நாடகா, மகராஷ்டிராவில் வாக்கு திருட்டு தொடர்பான நியாமான சந்தேகங்கள் தீர்க்கப்படவில்லை. வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடுவதில் என்ன தயக்கம்? அலுவலர்கள் செல்லும் போது வீட்டில் ஆட்கள் இல்லை என கூறியோ அல்லது அபத்தமான காரணங்கள் கூறி தகுதியான ஒருத்தரை கூட பட்டியலில் இருந்து நீக்கிவிடக் கூடாது. தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்க்கு ஆபத்தானது. நடுநிலையோடு செயல்படுகிறோம் என்பதை நிருபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. நிதானமாக சட்டமன்ற தேர்தல் நிறைவுற்ற பிறகு இதனை செய்ய வேண்டும்.'' என்றார்.
செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், '' மகாராஷ்டிராவில் திடீரென்று எப்படி 90 லட்சம் வாக்காளர்களை ஐந்து மாத இடைவெளியில் சேர்த்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தல் ஆணையமும், பாஜகவும் சேர்ந்து எப்படியெல்லாம் நவீன முறையில் வாக்குத்திருட்டு செய்கிறது என்று ராகுல் காந்தி தெளிவாக கூறி இருக்கிறார். முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணையாக நிற்கும். டிசம்பர் 4ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றால் பருவமழை தொடங்கி இருக்கின்றது. நம்முடைய மாநகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் எல்லாம் வெள்ளம் மீட்பு மழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளில் இருப்பார்கள். ஆகவே இது குறைந்தபட்ச நாகரிகமும், நியாயமும் இல்லாத நடவடிக்கை ஆகும். நியாயமாகவும், சுதந்திரமாகவும் ஜனநாயக வழியில் வெற்றி பெற முடியாது என்பதற்காக குறுக்கு வழியில் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.'' என்றார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, '' அனைத்து கட்சி கூட்டத்தில் 49 கட்சிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறினர். கூட்டத்தில் SIR -க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் SIR கொண்டுவரப்பட்டுள்ளது.
அவசர அவசரமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி ஒரு சதியை திட்டமிட்டுள்ளார்கள். இக்கூட்டத்தில் நீதிமன்றம் நாடுவது, மக்கள் இயக்கமாக மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மற்ற மாநில முதல்வர்களை ஒன்றினைப்பது தொடர்பாக தோழமை கட்சிகள் ஒன்றிணைந்து முடிவு எடுக்கப்படும்.'' என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், '' அவரவர் மாநிலங்களில் வாக்களிக்கும் உரிமை அளிக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது. தமிழகத்தை சேர்ந்தவர்களின் வாக்குரிமையை பறிக்க கூடாது. வட மாநிலத்தினவர்களால் தமிழ் சமூக வேலைவாய்ப்பு பறிபோகிறது. தமிழர்களின் வேலைவாய்பை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். வாக்குரிமை மட்டும் அல்ல, குடியுரிமையும் கேள்வி குறியாகிறது. வட மாநிலத்தவர்கள் இங்கு தங்கலாம், ஆனால் வாக்குகளை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தான் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.'' என்றார்.
அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், '' SIR என்ற பெயரில் மத்திய அரசு குடிமக்களின்
வாக்குரிமையை பறிக்கிறது. SIR மூலமாக சிறுபான்மை மக்களின் வாக்குகளை பறிக்கின்ற செயலாக பார்க்கிறோம். முதல்வர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் ஆதரிப்போம்.'' என்றார்.