காபியுடன் பிஸ்கட் சாப்பிட பிடிக்குமா? செரிமானம் முதல் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படும்! எச்சரிக்கும் ஆய்வு!

காபியுடன் பிஸ்கட் சாப்பிட பிடிக்குமா? செரிமானம் முதல் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படும்! எச்சரிக்கும் ஆய்வு!

நமது தினசரி வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக இருக்கும் சில விஷயங்களில் காபிக்கு எப்போதும் தனியிடம் உண்டு. சிலர் காலை எழுந்ததும், சோர்வாக உணரும் போது அல்லது உணவு உண்ணும் போது என காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால், நாம் அறியாமையால் செய்யும் சில பழக்கம் உணவில் இருந்து முழு பலனை கிடைக்கவிடாமல் செய்யும். அப்படி, காபியுடன் நாம் அடிக்கடி சேர்த்துப் பருகும் அல்லது உண்ணும் சில உணவுகள், நமது உடல்நலத்திற்கு, குறிப்பாக செரிமான மண்டலம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதாவது, காபியுடன் நாம் சேர்த்து சாப்பிடும் சில உணவுகள் காலப்போக்கில் செரிமானம் மற்றும் எலும்பு பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு. அந்த வகையில், காபியின் அருமையான நறுமணத்தை அனுபவித்துக்கொண்டே, ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், செரிமானக் கோளாறுகளை தவிர்க்கவும், எலும்புகளின் வலிமையை பெறவும் காபியுடன் தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ.

சிட்ரஸ் பழங்கள்: காபி இயல்பாகவே அதிக அமிலத்தன்மை (pH 4.5-5.0) கொண்டது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களும் அமிலத்தன்மை கொண்டவை. இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது, வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவு அதிகமாகிறது.

இதனால், இரைப்பை புறணி (stomach lining) எரிச்சலடைந்து, கடுமையான நெஞ்செரிச்சல் , வயிற்று வலி மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என Are Lifestyle Measures Effective in Patients With Gastroesophageal Reflux Disease? என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் இந்த சேர்க்கையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

பொரித்த மற்றும் அதிகக் கொழுப்புள்ள உணவுகள்: பொதுவாகவே, காபி குடிக்கும் போது மொறு மொறுப்பாக இருக்கும் சமோசா, வடை போன்றவற்றை சாப்பிடுவோம். ஆனால், இப்படி எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் போன்ற உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிரம்பியுள்ளன. காபி உடலில் கார்டிசோல் (Cortisol) எனப்படும் அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்ய தூண்டும்.

இது கொழுப்பு நிறைந்த உணவுகளை செரிக்க தேவையான நேரத்தை மேலும் அதிகரிக்கலாம். இதனால், செரிமானம் தாமதமாவதுடன், அதிகப்படியான கொழுப்பு உடலில் சேரும்போது, அது ரத்தக் கொழுப்பு அளவை உயர்த்தி, இதய ஆரோக்கியத்துக்குப் தீங்கு விளைவிக்கும் என NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.

பால் மற்றும் கால்சியம் நிறைந்த பால் பொருட்கள்: பாலில் தானே காபி போடமுடியும் என நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், காபி தூளில் உள்ள டானின்கள் மற்றும் ஆக்ஸலேட்டுகள் போன்ற சேர்மங்கள், உணவில் உள்ள கால்சியம் சத்தை உடல் உறிஞ்சும் திறனைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காபியுடன் பால் சேர்ப்பதன் நோக்கம் கால்சியம் சத்து பெறுவதாக இருக்கலாம். ஆனால், இந்தத் தடையின் காரணமாக, எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு அத்தியாவசியமான கால்சியம் உடலில் சேராமல் வீணாகலாம். இது நீண்ட காலப் போக்கில் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். அதனால் ப்ளாக் காபி குடிப்பது சிறந்தது.

இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு இறைச்சி மற்றும் பயறு வகைகள்: காபி, உடலின் முக்கிய ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதலைத் தடுக்கும் பண்பை கொண்டுள்ளது. குறிப்பாக, உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உள்வாங்கிக் கொள்வதைத் தடுக்கும் ஆற்றல் காபிக்கு உண்டு.

எனவே, சிவப்பு இறைச்சி (Red Meat) அல்லது பிற இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்ட உடனேயே காபி குடித்தால், ரத்த சோகை போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவும் இரும்புச்சத்தின் முழுப் பயனும் உடலுக்குக் கிடைக்காமல் போகலாம்.

அதிகச் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட தானியங்கள்: கடைகளில் கிடைக்கும் அதிக இனிப்புள்ள காலை உணவு தானியங்கள், பிஸ்கட்கள் அல்லது சர்க்கரை நிறைந்த பேஸ்ட்ரிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து குறைவாகவும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகமாகவும் இருக்கும்.

இவற்றை காபியுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்து, பின்னர் திடீரென குறையும். இந்த ஏற்ற இறக்கம் சோர்வு, கவனக்குறைவு மற்றும் பசி உணர்வை அதிகரித்து, நீண்ட காலப் போக்கில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். காபி குடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டியதில்லை. மாறாக, சரியான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதன் பலன்களை மேம்படுத்தலாம்.