கேரளா டூ கோவை - அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட 6.140 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு, கேரளா எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட சோதனைச்சாவடிகள் வழியாக தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் அவ்வப்போது ஹவாலா பணம் மற்றும் தங்கம் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வாளையாறு மற்றும் வேலந்தாவளம் எல்லைகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து கோயம்புத்தூருக்கு தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கே.ஜி சாவடி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில், உதவி ஆய்வாளர் திருமலைச்சாமி உள்ளிட்ட போலீசார் வாளையாறு எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தி, உள்ளே இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது பயணி ஒருவர் வைத்திருந்த கைப்பையில் தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பயணியை கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நிபின் (29) என்பதும், இவர் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் கொடுப்பதற்காக கேரளாவிலிருந்து 6.140 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நிபினிடம் இதே போல் ஏற்கனவே ஆவணங்களின்றி கோயம்புத்தூர் வழியாக தங்கம் கடத்தப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், ”கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்புத்தூர் வழியாக கேரளாவுக்கு அடிக்கடி ஹவாலா பணம் மற்றும் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாளையாறு மற்றும் வேலந்தாவளம் பகுதியில் நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் அங்கு பணியில் இருப்பதால் கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் க.க.சாவடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஆறு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த தங்கத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.