அண்ணாமலையார் தேர் திருவிழா - வெகு சிறப்பாக நடைபெற்ற பஞ்சரத தேரோட்டம்
திருக்கார்த்திகை திருவிழாவின் ஏழாவது நாளான இன்று அண்ணாமலையார் கோயிலில் பஞ்சரத மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 17 நாட்கள் நடைபெறுகிற இந்த திருவிழாவில் 7வது நாள் நடைபெறுகிற பஞ்சரத மகா தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது.
இந்த ஏழாம் நாள் திருவிழாவில் 58.8 அடி உயரத்தில் சுமார் 200 டன் எடையுள்ள மர தேரில் அண்ணாமலையாருடன் உண்ணாமுலை அம்மன் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அவர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபடுவார்கள். அப்போது வழி நெடுகிலும் உடல் வாத்தியம், கைலாய வாத்தியம் வாசித்து பக்தர்கள் சிறப்பிப்பார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று (நவ. 30) அதிகாலை 4:30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு வண்ண மலர்களால் மலர் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதன்பிறகு முழு முதற் கடவுளான விநாயகர் மரத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவரைத் தொடர்ந்து முருகர் வள்ளி தெய்வானையுடன் மரத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் 58.8 அடி உயரம் கொண்ட சுமார் 200 டன் எடையுள்ள மரத்தேரில் அண்ணாமலையாருடன், உண்ணாமுலை அம்மன் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு மகா ரத தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குறிப்பாக ஏராளமான பக்தர்கள் உடல் வாத்தியம், கைலாய வாத்தியம் வாசித்தும், சிவன் - பார்வதி வேடமணிந்தும் மாட வீதியில் அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து பராசக்தி அம்மன் தேர் உற்சவம் நடைபெறும். அதன்பிறகு பள்ளி மாணவர்கள் வடம் பிடித்து இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேர் உற்சவம் நடைபெறும்.